Headlines News :
Home » , , » பாராளுமன்றம் - (பகுதி -5)மத்திய அரசு - இந்திய அரசியலமைப்பு - TNPSC

பாராளுமன்றம் - (பகுதி -5)மத்திய அரசு - இந்திய அரசியலமைப்பு - TNPSC


இந்திய அரசியலமைப்பின் பகுதி - 5 மத்திய அரசைப் பற்றி குறிப்பிடுகிறது. மத்திய அரசு சட்டமன்றம்,  நிர்வாகம், நீதித்துறை என மூன்று அம்சங்களை கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர் தலைமையில் பாராளுமன்ற அரசு அமைய வழிவகுக்கிறது. 

இந்திய நாடாளுமன்றம் :

மத்திய அரசின் சட்ட மன்றத்தை குறிக்கும். இது மேல்சபை, கீழ்சபை  என இரு சபைகளைக் கொண்டது. மேல் சபையை மாநிலங்களவை அல்லது ராஜ்யசபை என்றும், கீழ் சபையை மக்களவை அல்லது லோக்சபை என்றும் அழைக்கிறோம். 

மக்களவை (லோக்சபா)

நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவை(லோக்சபா) முக்கியத்துவம் வாய்ந்த சபையாகும். இச்சபை உறுப்பினர்களை, மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகும். இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 530 உறுப்பினர்களும்,  யூனியன் பிரதேசங்களில் இருந்த 13 உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.  குடியரசு தலைவர் இரண்டு ஆங்கிலோ-இந்திய சமுதாயத்தினரை உறுப்பினராக நியமினம் செய்கிறார்.  இவ்வாறு மொத்தம் 545 உறுப்பினர்களைக் கொண்டது மக்களவை ஆகும்.

தகுதிகள் 

மக்களவை தேர்தலில் போட்டியிட கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
 இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் 
இந்தியாவில் ஏதேனும் ஒரு நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
 மத்திய மாநில அரசு பணியில் சம்பளம் பெறுபவராக இருக்க கூடாது
மனவளர்ச்சி குறைந்தவர்களும் பெற்ற கடனை திருப்பித்தர முடியாதவர்களும் போட்டியிட முடியாது.

பதவிக்காலம் 

பொதுவாக மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நாளிலிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு செயல்படலாம்.  பிரதம மந்திரியின் பரிந்துரையின் அடிப்படையிலோ அல்லது எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையிலோ குடியரசுத் தலைவர் மக்களவையை கலைக்கலாம்.

மக்களவைத் தேர்தல் 


மக்களவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  

தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு தனது மேற்பார்வையில் தேர்தலை நடத்துகிறது.  மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் நிர்ணயம் செய்து மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது.  

வயதுவந்தோர் வாக்குரிமை என்ற அடிப்படையில் 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளரின் பெயர் பட்டியலில் பெயர் பதியப்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்படுகிறது. 

மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதால் மாநிலங்களவை உறுப்பினர்களை விட மக்களவை உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரங்கள் உண்டு. 

நிதி மசோதாக்கள் மக்களவையில் மட்டுமே கொண்டு வர முடியும். அமைச்சர்கள் அனைவரும் கூட்டாகவும் தனித்தனியாகவும் மக்களவைக்கு பொறுப்புடையவர்கள்.  

மக்களவையின் தலைவர் சபாநாயகர் ஆவார்.  இவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சபாநாயகர்  இல்லாத காலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை சபாநாயகர் சபையை நடத்துவார்.

மாநிலங்களவை (இராஜ்ய சபா)

மாநிலங்களவை 250 உறுப்பினர்களைக் கொண்டது.  இவர்களில் 238 உறுப்பினர்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மறைமுக தேர்தல் முறை மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  இலக்கியம், கலை, அறிவியல் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பு அறிவும் நடைமுறை அனுபவம் உடைய 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமிக்கப்படுகின்றனர்.

தகுதிகள் 

இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
30 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் 
இந்தியாவில் ஏதேனும் ஒரு நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மக்களவை உறுப்பினராக இருக்கக் கூடாது
மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது பெற்ற கடனை திருப்பித்தர இயலாதவராகவோ இருக்க கூடாது 
மத்திய மாநில அரசு ஊழியராக இருக்க கூடாது.

பதவிக்காலம்

மாநிலங்களவை ஒரு நிரந்தர அவையாகும்.  இதனை கலைக்க முடியாது.

உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். ஆனால், இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு பெறுகின்றனர் . 

குடியரசுத் துணைத்தலைவர் மாநிலங்கள் அவையின் தலைவர் ஆவார். மாநிலங்களவை உறுப்பினர்களால் மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மாநிலங்களவைத் தேர்தல் 

மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களை  ஒற்றை மாற்று வாக்கு முறை மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.  இது மறைமுக தேர்தல் என்றும் அழைக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

நாடாளுமன்றம் மாநிலங்களவை,  மக்களவை என இரு அவைகளைக் கொண்டது. எனவே இந்திய நாடாளுமன்றம் ஈரவை மன்ற முறையை சார்ந்தது.  இதன் முக்கியமான பணி சீரிய முறையில் ஆட்சி நடப்பதற்கான சட்டம் இயற்றுதல் ஆகும்.  

நாட்டின் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக இச்சட்டங்கள் இயற்றப்படுகின்றன.  நாடாளுமன்றம் நாட்டின் நிதி நிலைமைக்கு முழு பொறுப்பாகும். 

மைய வரவு செலவுத் திட்டங்களை தாக்கல் செய்வது, வரி நிர்ணயம் செய்வதும் இதன் பணிகளாகும்.  

பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி பகிர்ந்தளிப்பதும் பொறுப்பாகும். அரசியலமைப்பு சட்ட விதிகளை திருத்தம் செய்வதும் குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் அரசியலமைப்பு அதிகாரங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தையும் நாடாளுமன்றம் பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தின் நம்பிக்கை உள்ளவரை தான் எந்த அமைச்சரவையும் செயல்பட முடியும்.

மைய நிர்வாகம் 

மைய நிர்வாகம் என்பது குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவை ஆகியவைகளைக் கொண்டதாகும்.   குடியரசுத்தலைவர் நாட்டின் நிர்வாகத் தலைவர் ஆவார். குடியரசுத் தலைவரின் நிர்வாகப் பொறுப்புகள் பிரதமர் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற்ற கட்சி தலைவர் அல்லது கூட்டணி கட்சிகளின்  தலைவரை பிரதமராக குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.

பாராளுமன்றம் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Featured Post

Tnpsc - ஐந்தாண்டு திட்டங்கள் - இந்தியப் பொருளாதாரம் - Indian Economics

1930 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலகட்டத்தில் இந்திய அரசியல் அறிவு சார்ந்தவர்கள் இடையே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடல் கு...

Popular Posts

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. V - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template